Difference between revisions 17500 and 17501 on tawikisource

{{விக்கிப்பீடியா|விநாயகர் அகவல்}}
'''ஔவையார் விநாயகர் அகவல்'''

(பொருள் நோக்குச் சொற்பிரிப்பு)
<poem>
சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பல இசை பாட
பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து அழகெறிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (5)

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குசப் பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்
திரண்ட முப்புரி நூல் திகழ் ஒளி மார்பும்
சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதநின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூசிக வாகன (15)

இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தான் எழுந்தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்து என் உளந்தனில் புகுந்து (20)

குரு வடிவாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இது பொருள் என
வாடா வகை தான் மகிழ்ந்து எனக்கு அருளிக்
கோடு ஆயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் (25)

தெவிட்டா ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கு அருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து (30)

தலம் ஒரு நான்கும் தந்து எனக்கு அருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறு ஆதாரத்து அங்கு இசைநிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சு உரை அறுத்தே
இடை பிங்கலையின் எழுத்து அறிவித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலம் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்று எழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டு எழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டு எழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈர் எட்டு நிலையும்
உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முகச் சூக்கமும்
எண் முகமாக இனிது எனக்கு அருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரி எட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிது எனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோ லயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள் வெளி இரண்டிற்கு ஒன்று இடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில் (60)

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து 
அல்லல் களைந்தே அருள் வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் (65)

கணு முற்றி நின்ற கரும்புளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடு மெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலை அறிவித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட
வித்தக! விநாயக! விரைகழல் சரணே. (72)
</poem>